Preethi S Karthikதனிப்பெரும் துணையே #ENV2

தனிப்பெரும் துணையே – 24

தனிப்பெரும் துணையே – 24

Trigger warning!! Might be heavy! Readers discretion advised. கொஞ்சம் அழுத்தமான பதிவு. பலவீனமானவர்கள் தவிர்த்து விடவும்.

ப்ரியாவால் அவன் கோலத்தைப் பார்க்க முடியவில்லை.

கண்களில் கண்ணீருடன், “என்னண்ணா ஆச்சு இளாக்கு. ஏன் இப்படி படுத்திருக்கான்?” குமாரிடம் கேட்டாள்.

“செடேடிவ்ஸ்(sedatives) குடுத்துருக்காங்க ப்ரியா. ரொம்ப ஸ்ட்ரெஸ்ட் ஆஹ் ஃபீல் பண்ணிருப்பான் போல. நான் சொல்றத விட அதை டாக்டர் உன்கிட்ட சொன்னா கரெக்டா இருக்கும்னு தோணுது. இளாக்காக அவர் ஸ்பெஷல் கேர் எடுத்துக்கறாரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. இங்க ஹிரானந்தாணிலதான் இருக்காரு. வந்துடுவார்” என்றவன் மருத்துவரை அழைக்க செவிலியரிடம் சென்றான்.

ப்ரியா மூடப்பட்ட கதவு வழியே உள்ளே அவனைப் பார்த்தாள். உடல் முழுவதும் ஒரு வித பயத்தில் சில்லிட்டது. பல நாள் தூங்காதவன், தூங்குவது போல் படுத்திருந்தான்.

‘ஏன் இளா என்கிட்ட எதுவுமே சொல்லல? கோபத்தோடு போனேன், ஆனா யார்மேலயுமே என்னால ரொம்ப நாள் கோபத்தை வச்சுக்க முடியாது. அதுவும் உன் மேல? மனசு சரி ஆனவுடனே வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள என்ன பண்ணி வச்சிருக்க?’ மனதில் ஒருவித வலி… அவனை அந்த நிலையில் பார்க்கும்போது.

சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்தார் ஐஐடி பாம்பே மருத்துவமனையின் மனநல மருத்துவர். கிட்டத்தட்ட அறுபதை கடந்த வயது. இரவு நேரம் என்பதால் சாதாரண உடையில் இருந்தார்.

“ஹலோ டாக்டர். இவங்க ப்ரியா. இளாவோட வைஃப்” என்று அறிமுகப்படுத்தினான் குமார் ஹிந்தியில்.

“ஓ! இசை?” என்று அவர் புன்னகைக்க, ப்ரியா சின்ன தலையசைப்புடன், “இசைப்ரியா” என்றாள்.

“தேங்க்ஸ் குமார் இவங்ககிட்டதான் பேசணும்னு இருந்தேன்” மருத்துவர் சொன்னவுடன் குமார், “ஐ நோ டாக்டர். அவங்களும் இளா பத்தி தெரிஞ்சுக்க நினைக்கறாங்க” என்றவன் இருவரிடமும் சில நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டான்.

“சோ இசை. சொல்லுங்க ஹவ் ஆர் யு” என்று மருத்துவர் ஆரம்பிக்க, “டாக்டர் இளாக்கு என்ன ஆச்சு?” அவளுக்கு அதுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

“சொல்றேன். பட் நீங்க ப்ரெக்னென்ட். ஐம் ஜஸ்ட் வரீட் அபௌட் யுவர் ஹெல்த் (I’m just worried about your health). வீட்ல பெரியவங்க யாராச்சும் இருக்காங்களா?”

அவருக்கு எப்படி அவள் கர்ப்பமாக இருப்பது தெரியும் என்று யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

ப்ரியா வெற்றுமுகத்துடன், “டாக்டர். எதாயிருந்தாலும் சொல்லுங்க. இளாக்கு எப்பவுமே நான்தான்” என்றாள், ‘என்னால் எதுவும் தாங்கிக்கொள்ள முடியும்’ என்ற தொனியில்.

மருத்துவர் புன்னகையுடன், “அது தெரியுமே. அவர் சொன்னதுல, ஏன் நினைக்கறதுல கூட நீங்க மட்டும்தான் இருக்கீங்க. எப்பவுமே இசை புராணம்” என்றவுடன், ப்ரியாவின் கண்கள் கலங்கியது.

அவனிடம், ‘உன்னை காதலித்ததற்காக வருந்துகிறேன்’ என்று சொன்ன வாக்கியம் இப்போது ஈட்டியால் குத்தியது போல ஒரு உணர்வு அவளுள்.

“ஓகே இசை. இளன் ஒரு ரெண்டு நாள் முன்னாடி இங்க வந்தாரு அவர் எதுக்காக வந்தாருன்னு உங்களுக்குத் தெரியுமான்னு தெரியல” என்றவர் சற்று நிறுத்தி,

“சூசைடல் தாட்ஸ்(Suicidal Thoughts – தற்கொலை எண்ணங்கள்) வருதுன்னு சொல்லி வந்திருந்தார்” என்றதும் ப்ரியா அதிர்ந்து, “டாக்டர்…” என்று கத்த, திடீரென தலையை சுற்றியது அவளுக்கு. தன்னிலையில் இல்லாமல் அவள் கண்கள் கொஞ்சம் சொருகியது.

உடனே அவர் அவளை சாப்பிட்டாயா என்று சோதித்துவிட்டு கேட்க, அது எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து, “டாக்டர் இளா கண்டிப்பா அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டான் டாக்டர்” என்றாள் கண்ணீருடன்.

“ஸீ இசை. யு ஹவ் டு பி ப்ரேவ். இந்த சின்ன வயசுல அதுவும் இந்த மாதிரி நேரத்துல இதெல்லாம் சொல்ல கஷ்டமாதான் இருக்கு. பட் ஆப்ஷன்ஸ் இல்ல” என்றவர் செவிலியரை உணவு வாங்கிவரச் சொன்னார்.

அவளை வற்புறுத்தி சாப்பிட சொல்ல, “உங்களுக்கு நேரம் ஆகிடும் டாக்டர். நீங்க சொல்லுங்க” என்றாள்.

அவளை உணவு உண்ண சொன்னவர், “இளன் என்னோட ஸ்பெஷல் கேர்ல இருக்கார். சோ ப்ராப்ளம் இல்ல. நீங்க சாப்பிடுங்க” என்றவர், அவள் சாப்பிடும் வரை காத்திருந்துவிட்டு, பேச ஆரம்பித்தார்.

“ஹி இஸ் டிஃப்ரெண்ட். இதுபோல வர்றவங்க வாழ பிடிக்கலன்னு சொல்லுவாங்க, இல்ல வாழணும்னு ஆசை இருக்குனு சொல்வாங்க. இவரும் வாழணும்னு சொன்னார், அதுக்கான ரீசன் நீங்கதான்”

“என்கூட வாழணும்னு சொன்னானா டாக்டர்?” குற்ற உணர்ச்சியுடன் கண்ணீர் மல்க அவள் கேட்க, மறுப்பாக தலையசைத்தார்.

ப்ரியா புரியாமல் பார்த்தாள்.

“அவருக்காக வாழ விருப்பமில்லை. ஹி வான்ட்ஸ் யு டு பி ஹாப்பி. அவர் ஏதாச்சும் இதுபோல பண்ணிட்டு, அது உங்களால லைஃப்டைமுக்கும் மறக்க முடியாம போயிடுமாம். அவர் ஞாபகமாவே இருக்க வாய்ப்பு இருக்காம். அந்த வலிய உங்களுக்குத் தரக்கூடாதாம். அவரை மறந்து நீங்க வேற வாழ்க்கை தேடிக்கணுமாம். அந்த ரீஸன்னால மட்டும்தான் வாழணும்னு சொன்னார்” அவர் கூறியவுடன், ப்ரியாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

“இங்க அவர் வந்ததுல இருந்து, இதை மட்டும்தான் சொல்லிட்டே இருந்தார். மொதல்ல அவரை நார்மல் பண்ணணும்னு மெடிகேஷன்ஸ் கொடுத்தோம். கொஞ்சம் செட்டில் ஆனப்புறம், அவரை பத்தி… எது அவரை ட்ரிக்கர் பண்ணிச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்க நினைச்சோம். ஹி வாஸ் சோ கோஆப்ரேட்டிவ். அவர் பெர்மிஷனோட அந்த செஷன் ரெக்கார்ட் பண்ணினோம். அவரோட சின்ன வயசுல இருந்து நடந்தது எல்லாமே சொன்னார்” என்ற மருத்துவர், குறிப்பேட்டை பார்த்து,

“அவரோட அம்மா தவறினது, அப்புறம் அக்கா அவரை விட்டுட்டு போனது, ஸ்கூல்ல எல்லாருமே அவரை தனியா ஒதுக்கி வச்சது, அவரோட ஸ்கூல் டேஸ், அப்புறம் இந்துமதி ஃப்ரெண்ட்ஷிப், காலேஜ், அப்புறம், அவங்க அக்காக்கும், ஃப்ரெண்டுக்கும் ஒரே சமயத்துல ஆன கல்யாணம், ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லாதது, உங்கள பார்த்தது, பழகினது, காதலிச்சது, கல்யாணம் பண்ணிட்டது, தென் உங்களுக்குள்ள வந்த ப்ராப்ளம்ஸ், அவரோட பிஹேவியர் சேஞ்சஸ்ன்னு எல்லாமே சொன்னார். அதோட ரெக்கார்டிங்ஸ் இது. என்னோட தொழில் தர்மப்படி இதை உங்களுக்கு காட்டக்கூடாது. பட் ஐ வாண்ட் இளன் டு பி பேக். அது இப்போதைக்கு உங்களால மட்டும்தான் முடியும்” என்றவர் அவனிடம் நடந்த உரையாடலை போட்டு காட்டினார்.

ப்ரியா டைரியில் படித்ததுதான். ஆனால் அவன் பட்ட கஷ்டங்களை, அவனே சொல்லும்போது அவள் மனம் துடித்தது.

(குறிப்பு: செழியன் முன்பு கடந்த காலத்தை பற்றி பகிர்ந்து கொள்வதை பார்த்தோம். அது இந்த மனநல மருத்துவரிடம்தான்! விவரத்திற்கு – அத்தியாயம் 11 பார்க்கவும்.)

டைரியில் படித்தவரை கண்ணீருடன் பார்த்தவள், அவள் சென்றவுடன் நடந்ததை அவன் சொன்னபோது, பதறிவிட்டாள்!

***

ப்ரியா அவனை விட்டு சென்றவுடன், கிட்டத்தப்பட்ட பித்துப்பிடித்தவன் போல இருந்த செழியனுக்கு அடிக்கடி சில ஒளிகள் தெரிவதுபோலவே இருந்தது. பின் திடீரென கேட்கும் சத்தங்கள் அவனைப் பயப்படுத்தியது.

ப்ரியாவின் உடையை கையில் பற்றிக்கொண்டு, திடீரென சத்தம் கேட்கும் போதெல்லாம், சில சமயம் கத்தியும், சிலசமயம் பயத்தில் வாயை மூடிக்கொண்டும் மூலையிலேயே உட்கார்ந்திருந்தான்.

ப்ரியாவின் எண்ணங்கள் நெஞ்சை அழுத்தியது. எங்கு பார்த்தாலும் அவள் முகமே தெரிவது போல் இருந்தது.

அவளின் சிரித்த முகம், கோபமான முகம், என்று பல முகங்கள் தெரிந்தாலும், கடைசியாக பயந்த முகம், அழுத முகம், அவன் முன்னே தெரிய, அந்த குரல் உன்னால்தான் அவளுக்கு இந்த நிலைமை என்று அவனை ஏளனம் செய்வது போல் இருந்தது.

அவன் செய்ய வேண்டிய ப்ராஜக்ட் மறந்து, சாப்பாடு மறந்து, தூக்கம் மறந்து, தன்னிலை மறந்து இருந்தவனுக்குத் தலை, உயிர் போவது போல வலித்தது. யாரோ தலையில் கட்டையால் அடிப்பது போல உணர்வு.

முன்பொருமுறை அதீத தலை வலியின் காரணமாக, தூக்கம் தடைபடுவதாக சொல்லி, மருத்துவரிடம் பரிசோதித்தபோது அவர் தந்த தூக்க மாத்திரை ஞாபகம் வர, அதை போட்டுக்கொண்டு தூங்க முயன்றான், ஆனால் அதுவும் உதவவில்லை.

அவனுக்கு நன்றாக தெரிந்தது. இதுவெல்லாம் மன நோய்க்கான அறிகுறிகள் என்று. எந்த மனநோய் என்பதும் புரிந்தது. உபயம் கூகுள்!

இதுபோல பயத்திலேயே அடுத்த இரண்டு நாட்களும் கழிய, அவனை தொடர்பு கொள்ள முடியாமல் குமார் வீட்டிற்கே வந்துவிட்டான்.

செழியனை பார்த்தவுடன் அதிர்ந்த குமார், ‘என்ன ஆயிற்று?’ என்று கேட்க, எதுவும் சொல்லாமல் உடல் சரியில்லை என்றான் செழியன். ப்ரியாவை பற்றி கேட்டபோது, ஊருக்குச் சென்று விட்டாள் என்றான்.

வற்புறுத்தி, அவனை தன்னுடன் அழைத்துச் சென்றான் குமார். இதுவே முதல் முறை, இதுபோல மற்றொருவரின் இடத்திற்கு அவன் செல்வது. இதுவரை யாருடைய தேவையும் அவனுக்கு இருந்ததில்லை.

அடுத்து கொஞ்சம் நாட்கள் குமாருடன் விடுதியில் இருக்க, தன்னிடம் மாற்றம், கொஞ்சம் முன்னேற்றம் தெரிவது போல் இருந்தது செழியனுக்கு.

அந்த சமயம் அவன் பல நாள் காத்திருந்த ஒரு பெரிய ரிசர்ச் நிறுவனத்தில், அவனுடைய ஆராய்ச்சி குறித்து ப்ரெசென்ட்டேஷன் செய்ய அழைப்பு வந்திருந்தது.

திருமணத்திற்கு முன், முதல் முறை அழைப்பு வந்தபோது, செழியன் அதற்குத் தயாராக இல்லை. பின், அதை பற்றி அவன் ப்ரியாவிடம் சொன்னபோது அவள் மிகவும் பெருமைப்பட்டாள். அவள் கண்கள் காட்டிய அந்த அழகான பரிமாணத்தை அப்போது ரசித்தான்.

‘தன்னால் முடியுமா?’ என்று அப்போது அவன் அவளிடம் கேட்க ப்ரியாவோ, “என் விஷஸ் எப்போவும் உனக்கு இருக்கும் இளா. கண்டிப்பா அடுத்த முறை வரும்போது நீ சூப்பரா பண்ணுவ. ஐம் வெயிட்டிங்” என அவனை அப்போது தேற்றினாள்.

இப்போது மறுபடியும் அந்த நிறுவனம் அழைப்பு விடுக்க, ‘தான் இருக்கும் நிலையில் தன்னால் முடியுமா?’ என்ற கேள்வி அவனுள். ஊக்கப்படுத்த ப்ரியாவும் பக்கத்தில் இல்லை.

ஆனால் அவனுடைய டிபார்ட்மென்ட்டில் அவனைக் கண்டிப்பாக கலந்து கொள்ளச் சொன்னார்கள். ஹெச்ஓடியும் கொஞ்சம் வற்புறுத்தினார். கல்லூரிக்குக் கிடைக்கும் பெருமையை விட மனமில்லை அவருக்கு.

பல யோசனைக்குப் பின், அதற்குத் தயாராக, அவன் வீட்டிற்கு வந்தான். அந்த வீடே ஏதோ ஒரு பீதியை கிளப்பியது. ப்ரியா இல்லாமல் ஏதோ சூனியம் சூழ்ந்த வீடு போல இருந்தது.

ஆனால் இப்போது எந்த குரலும் கேட்காதது போல, எந்த ஒளியும் தெரியாதது போல உணர்ந்தான். அப்படியே இரவு தூங்கிவிட, திடீரென ப்ரியா பக்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வு.

ஆனால் அது வெறும் மாயை என்று தெரிந்த போது, மனதில் அழுத்தம் மிகவும் அதிகமானது. ஒரு முறை அவள் குரல் கேட்க, அவன் மனம் துடித்தது.

‘அவ்வளவு பேசி அனுப்பிவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்துப் பேசுவாய்?’ என்று அவன் மனம் நினைக்க, ஒரு ஒளி அவன் முன் நிழலாடியது போல உணர்ந்த செழியனின் கண்கள் பயத்தைக் காட்டியது.

‘அவ பேச மாட்டா பார்க்கலாமா?’ என்று முன்பு அவன் கேட்ட அதே குரல் மறுபடியும் ஒலித்தது.

செழியன் அதைக்கேட்டு பயந்தாலும், ‘இல்ல, என் இசை பேசுவா!’ என்று இல்லாத ஒருவருடன் பேசிவிட்டு, அவளை அழைக்க, ப்ரியா அழைப்பை எடுக்கவில்லை. பலமுறை அழைத்தான். பயனில்லை.

திடீரென அழைப்பு எடுக்கப்பட்டது. ஆனால் பேசியது கவிதா, அகிலனின் மகள் வெண்பா. ப்ரியா அவனிடம் பேசாமல், இருமியவாறு தட்டிக்கழித்தாள். செழியன் வீறிட்டு கத்தினான், அந்த புறக்கணிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல்.

இப்போது அந்த குரல் பலமாக சிரிக்க, “சிரிக்காத” என்று அதனிடம் கோபத்தில் கத்தினான். ஆனால் அந்த சத்தம் நின்றபாடில்லை. பின், அதனிடம் அழுது கெஞ்சினான் சிரிக்க வேண்டாம் என்று.

தன்னிலை இப்படி ஆகிவிட்டதே என்ற எண்ணம் ஒருபக்கம், தனக்குப் பழையபடி யாருமில்லை என்ற எண்ணம் மறுபக்கம் அவனை உலுக்கியது.

ப்ரியாவின் புகைப்படத்தை பற்றிக்கொண்டு அவளையே பார்த்தான். ‘தன் வாழ்வை மாற்ற வந்தவள்!’ என்ற ஆசை நிராசை ஆனதே என்ற ஏமாற்றம் அவனை முற்றிலுமாக உடையச்செய்தது. கத்தி அழுதான்.

அவள் குரலை கேட்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனை வலுவாகத் தாக்க, மறுபடியும் அவளை அழைத்தான். அழைப்பு அவளுக்குச் செல்லவில்லை. ‘தன்னை வெறுத்துவிட்டாளோ?’ அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘அவளிடம் பேசியே ஆகவேண்டும்’ என நினைத்து தன் அக்காவை அழைத்தான். கவிதா மூலம் ப்ரியாவிடம் போன் சென்றது. ஆனால் அவள் பேசவில்லை.

‘அவளிடம் ப்ரெசென்ட்டேஷன் குறித்து சொன்னால் பேசுவாளோ?’ என நினைத்துப் பேசினான். அதற்கும் பதில் இல்லை. அவள் போனை வைத்து விட்டாள்.

அவளின் இந்த நிராகரிப்பு, இதயம் பிளந்து கொண்டு வெளிவரும் வலி அவனுக்குத் தந்தது.

மனதின் அழுத்தம் அதிகமாக அதிகமாக, திடீரென ஏதோ ஒன்று தன்மேல் ஊறுவது போல ஒரு உணர்வு. கைக்கொண்டு தட்டிவிட்டான். ஆனால் அது மேலும் மேலும் முன்னேறி கழுத்தை அடைந்தது போல் உணர்வு.

பின் அது கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தவனால் மூச்சு விடமுடியவில்லை. “இசை… இசை என்கிட்ட பேசு இசை” என்று பயத்தில் கத்தினான்… ஆனால் பேச்சு வரவில்லை.

‘அவளே உன்னிடம் பேசவில்லை… எதற்கு நீ உயிரோடு இருக்கிறாய்?’ என்ற குரல் அவனுக்குக் கேட்டது இப்போது.

மறுபடியும் அதே உறுத்தல் உடம்பில். அது கழுத்தை அடைந்தது, ஆனால் இப்போது அவனே தன் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான்.

சுவாசக்குழாய் முட்ட, மூச்சு விடுவது சிரமாகும்போது, எதிரே ப்ரியாவின் முகம் புகைப்படத்தில் தெரிய, தன்னைதானே நெரித்துக் கொள்கிறோம் என்பதை உணர்ந்து, சட்டென கையை எடுத்தான்.

அவன் செயல் அவனுக்கு புரிய, கண்முன்னே ப்ரியாவின் சிரித்த முகம். ‘தான் ஏதாவது செய்து கொண்டால் அவள் நிலை!’ என்று அந்த நிலையிலும் அவளை குறித்து யோசித்தான்.

மண்டை வெடிப்பது போல் வலி. ‘தனக்கு எதுவும் ஆகக்கூடாது. தனக்காக அல்ல, இசைக்காக’ என முடிவெடுத்து… அடுத்து இது போல உணர்வு, எண்ணம் வரும் முன், அவசரமாக குமாரை அழைத்து உடனே வரச்சொன்னான்.

கதவை திறந்து வெளியில் பார்த்தபடி உட்கார்ந்தவன், மனதில் ஒன்றே ஒன்றுதான்.

‘இசைக்காக வாழ். செத்தும் கெடுத்தான் என்றாகிவிடக்கூடாது. சைக்கோவை விட்டு பிரிந்து வந்த பெண்ணிற்கு, நல்வாழ்வு அவர்கள் வீட்டில் அமைத்து தருவார்கள். அகிலன் இதற்காகவெல்லாம் தன் அக்காவை வெறுக்க மாட்டான்’ என்று அளவுக்கு மீறி யோசித்துக் கொண்டிருக்கும் போது, குமார் வந்தான் பதட்டத்துடன்.

கல்லூரியின் எமர்ஜென்சி நம்பர் உதவியுடன் உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி சொன்னான் செழியன்!

***

வீடியோவில் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா குலுங்கி குலுங்கி அழுதாள். அவனின் ஒவ்வொரு கஷ்டத்தையும் அவனே சொன்ன போது, அதன் வலி அவன் கண்களில் தெரிந்தது.

“என்னாச்சு டாக்டர் அவனுக்கு?” கண்ணீருடன் மருத்துவரை கேட்டாள்.

“இளன் சொன்னது வச்சு பார்க்கும்போது, அவருடைய சிம்டம்ஸ் எல்லாம் வச்சு பார்த்ததுல, அவருக்கு பைபோலார் டிசாடர்” என்றதும் அதிர்ச்சியில் ப்ரியா உறைந்துவிட்டாள்.

“எக்ஸ்ட்ரீம் எமோஷன்ஸ் அன்ட் மூட் ஸ்விங்ஸ் (mood swings), வலி, துன்பம், விரக்தி, பயம், சோகம், கவலை இதெல்லாம் டிப்ரஷன் உண்டாக்கும். ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, உற்சாகம், பெருமை, கோபம், தற்பெருமை, எரிச்சல், மகிழ்ச்சி இதுபோல விஷங்கள் ஹைபோ மேனியா இல்ல மேனியாவை (Hypomania or Mania) உண்டாக்கும்”

“சோ இதுபோல எல்லா உணர்ச்சிகளுமே சாதாரணமா இல்லாம எக்ஸ்ட்ரீம் லெவல்ல இருக்கும். இது அவருக்கு எப்போ ஸ்டார்ட் ஆச்சுன்னு கரெக்ட் ஆஹ் சொல்ல முடியல. அவர் அம்மா இறந்தப்பவோ, அக்கா ஹாஸ்டல் போனப்பவோ, வந்திருக்கலாம். பட் அந்த டைம்ல… அவர் சின்ன பையன். சோ எப்படி ஃபீல் பண்ணாருன்னு இப்போ அவருக்கு சொல்ல தெரியல. பட், ஒரே டைம்ல அவருக்கு பிடிச்ச, அவரோட அக்கா கல்யாணம், ஃப்ரெண்ட் இந்துமதி கல்யாணம், அதுவும் பிடிக்காத கல்யாணம்னு தெரிஞ்சப்ப, ரொம்பவே டிப்ரெஸ்டா ஃபீல் பண்ணிருக்கார். அதனோட வெளிப்பாடு, எக்ஸாம்ல சரியா பர்ஃபார்ம் பண்ண முடியாம போயிருக்கு. சுத்தமா பிளாங்க் அவுட் ஆயிடுச்சுபோல.

அதே நிலைமைல இருந்தவர், உங்கள பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமா மறக்க, மாற ஆரம்பிச்சிருக்கார்.

நார்மலா எல்லாம் நடக்கிற மாதிரி இருந்தப்ப, கொஞ்சம் அதிக வேலை எடுத்து செய்ய ஆரம்பிச்சபோது, தூக்கம் கெட ஆரம்பிச்சிருக்கு. ஒரு ஸ்டேஜ்ல தூக்கம் சுத்தமாவே இல்ல. பட் அது ஒரு பெரிய விஷயமாவே தெரியல அவருக்கு. எந்த வேலையையுமே ஒரு எக்ஸ்ட்ரா ஜோஷ் ஓட செய்திருக்கார்.

அந்த டைம்லதான் உங்க கல்யாண பேச்சு… அங்க நடந்த சில விஷயங்கள் அவரை பாதிச்சிருக்கு. அவரை இன்னொருத்தரோட ஒப்பிட்டு பேசி, உங்களை நல்லா பார்த்துக்க பணம் முக்கியம் அப்படிங்கற மாதிரி பேச்சுக்கள் அங்க நடந்திருக்கு. அது அவரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிருக்கு. அந்த ஸ்டேஜ்ல, அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட் ஆகியிருக்கு. மே பி ஹைபோ மேனியா ஆர் மேனியா ஸ்டார்ட் ஆகியிருக்கலாம்.

அதுக்கு சில பாயிண்ட்ஸ், தூக்கம் சுத்தமா இல்லாம, எப்பவுமே ஒரு எனர்ஜியோட, டான்ஸ் ஆடினப்ப வந்த ஒரு ecstatic feel, ரொம்ப ஓவர் ரொமான்டிக், தேவையில்லாம அதிக செலவு, சில தேவையற்ற ஆர் ரிஸ்கி இன்வெஸ்ட்மெண்ட்ஸ், அதிகமா பேசாம இருந்தவர் ரொம்ப பேச ஆரம்பிச்சு, இண்ட்ரோவர்ட்டா (introvert) இருந்தவர் சோஷியலைஸ் ஆகி நட்பு வட்டாரம் உருவாக்கி, அதிக கோபம் வராம இருந்தவர் தேவையில்லாம கோபப்பட்டு, அந்த கோபத்துல வர்ற மிதமிஞ்சிய வார்த்தைகள், சம்மந்தமே இல்லாம எரிச்சல் ஆகறது, அளவுக்கு அதிகமா யோசிக்கிறது, தன்னால முடியாதது இல்லவே இல்லனு தற்பெருமையா ஃபீல் பண்ணறது… இந்த சிம்டம்ஸ் எல்லாம் இளன் கிட்ட இருந்திருக்கு”

அவர் கொஞ்சம் நிறுத்த, ப்ரியாவிற்குத் தலையே சுற்றியது. அவனுடைய மாற்றங்கள் அனைத்தும் சாதாரணமாக நடந்தது போல, தனக்காக செய்தது போல இருந்தது அவளுக்கு. அவர் தொடர்ந்தார்.

“சோ இதுக்கப்புறம் இன்டென்சிட்டி அதிகமாக ஸ்டார்ட் ஆகியிருக்கு. இந்த நிலைமைல, சிலர் மத்தவங்கள ஹர்ட் பண்ணுவாங்க, சிலர் ஸெல்ஃப் ஹர்ட் பண்ணிப்பாங்க. இளனால உங்களை ஹர்ட் பண்ண முடியாது, சோ ரெண்டாவது டைப்… அவரையே ஹர்ட் பண்ணிக்க ஸ்டார்ட் பண்ணிருக்காரு. இந்த ஸ்டேஜ்ல அடுத்த ட்ரிகர், அவரை சைக்கோன்னு சொன்னது, யாருக்குமே தாங்கிக்க முடியாத வார்த்தை அது.

அது அவரை ரொம்ப அதிகமாவே ட்ரிகர் பண்ணிருக்கு. அந்த டைம்லயும் உங்க நிலையை பத்திதான் அவர் யோசிச்சிருக்கார். நீங்க நல்லாயிருக்கணும், ஒரு சைக்கோவோட வாழ்றது கஷ்டம்னு நினச்சுருக்கார். அதனோட வெளிப்பாடு, எதை சொன்னா அது உங்கள பாதிக்கும்ன்னு தெரிஞ்சு அதையே சொல்லி, அவரை உங்ககிட்ட இருந்து பிரிச்சிக்க முடிவு பண்ணி… அதை சரியாவும் நடத்திட்டார். நீங்களும் கிளம்பிட்டீங்க.”

ப்ரியாவின் அழுகை நிற்கவில்லை. முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

“அந்த டைம்லதான் ரொம்பவே எக்ஸ்ட்ரீம் லெவல்க்கும் போயிருக்கார். ஹலுசினேஷன்(hallucination), டெலூஷன்னு(delusion) சொல்வாங்க. இல்லாத ஒன்ன இருக்கறதா நினைக்கறது, அதையே நம்பறது, அதோட பேசறது.

அது கொஞ்சம் கொஞ்சமா அதிகம் ஆக ஆக, அவருக்கு முன்னாடியே இருந்த மைக்ரேன்(migraine – தலைவலி) அதிகமாக, மன அழுத்தம் அதிகமாக, அடுத்த ஸ்டேஜ்… தற்கொலை எண்ணங்கள் (suicidal thoughts) வந்திருக்கு. அந்த ஸ்டேஜ்லதான் அவர் இங்க வந்தார்”

இங்க வந்ததுல இருந்து அவர் சொன்னது நான் சாகக்கூடாது. வாழணும், நான் ஏதாச்சும் பண்ணிட்டு, இசைய வாழ்க்கை முழுசும் கஷ்டப்படுத்தக்கூடாதுனு மட்டும்தான் சொல்லிட்டே இருந்தார்” என்று அவர் நிறுத்த… ப்ரியா முற்றிலுமாக உடைந்துவிட்டாள்.

“டாக்டர் என் இளா எனக்கு வேணும் டாக்டர். இதை கியூர் பண்ணிடலாம்ல?” அழுதபடி அவள் கேட்க, மூச்சை ஆழ இழுத்து மறுப்பாக அவர் தலையசைத்தவுடன், ப்ரியாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் கதறி அழுக, “கியூர் பண்ண முடியாது பட் கேன் பி ட்ரீட்டபல் வித் லைஃப்லாங் மெடிகேஷன்ஸ் (can be treatable with lifelong medications if required – ஆனால் ஆயுள் முழுவதும் தேவைப்படும் போது மருந்துகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம்)” என்று சொன்னவுடன், அவர் சொன்னதை கேட்டு வருந்துவதா… இல்லை நிம்மதி அடைவதா… என்று அவளுக்கே புரியவில்லை!

(குறிப்பு: இதில் உள்ள மருத்துவ குறிப்பேடுகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத்துறை சார்ந்த இணையதளங்களின் உதவியுடன் எடுக்கப்பட்டது. இது நோயாளிக்கு நோயாளி அவர்களின் பாதிப்பின் பொறுத்து மாறுபடும்.)

1
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved