தனிப்பெரும் துணையே – 26

தனிப்பெரும் துணையே – 26

செழியனை பார்த்ததும் ப்ரியா மனதில் பல நாட்களுக்குப் பிறகு நிம்மதி மீண்டது. பழையபடி மாறியிருந்தான். ஒரு சின்ன மூச்சை வெளியிட்டபடி புன்னகைத்தாள்.

செழியனுக்கு அவளைப் பார்த்ததும் மனது அடித்துக்கொண்டது. ஒரு வித வலியுடன் அவளைப் பார்த்தான்.

உடல் எடை குறைந்து, கண்களில் கருவளையம் என அவள் முன்பு இன்டெர்வியூவில் கலந்துகொள்ள எப்படி வந்திருந்தாளோ, அதை விட சோர்வாகத் தெரிந்தாள். வயிற்றில் கொஞ்சமே கொஞ்சம் மேடு தெரிந்தது.

மருத்துவரைப் பார்த்ததும் ப்ரியா அவரை உள்ளே அழைத்து உபசரிக்க, செழியன் கண்கள் துளியும் அவளை விட்டு நீங்கவில்லை.

“சோ இசை. ஆர் யு ஹாப்பி, இளன் இஸ் பேக்” மருத்துவர் சொன்னதும் அவரைப் பார்த்து புன்னகையுடன் ஆம் என்று தலையசைத்தாள் ப்ரியா.

“நைஸ். உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசணும்னுதான் நானே வந்தேன். இளன்க்கு ட்ரீட்மெண்ட் நல்ல படியா முடிஞ்சது. பட், டேப்ளட்ஸ் ஸ்கெட்யுல் படி சாப்பிடணும். டூ வீக்ஸ் ஒன்ஸ் கவுன்சிலிங் வரணும். எல்லாம் நார்மலா இருக்கேனு விட்டுடக்கூடாது. இசை நீங்களும் கொஞ்சம் பார்த்துக்கோங்க.

தென் இளன், தூக்கம் ரொம்ப முக்கியம். ட்ரீட்மெண்ட்ல உங்க ஸ்லீப்பிங் பேடெர்ன் எப்படி இருந்ததோ, அதுவே கண்டின்யு பண்ணணும். எக்ஸ்ட்ரா ஒர்க் எடுத்து பண்ணாலும், நைட் அதை பண்ணக்கூடாது” என்றவுடன்,

ப்ரியா, “இனி எக்ஸ்ட்ரா ஒர்க்கெல்லாம் வேணாம் டாக்டர். எனக்கு எக்ஸாம்ஸ் வந்துடுச்சு. நான் டிபார்ட்மென்ட்ல டெம்ப்ரரி ரோல்ல அஸோஸியேட் ஆஹ் ஒர்க் பண்ணப்போறேன். சோ மேனேஜ் பண்ணிடலாம்” என்றாள் செழியனை பாராமல் மருத்துவரிடம்.

அவன் அவளைத் தவிர எங்கும் பார்க்கவில்லை. ‘ஏன் தன்னை பார்த்துப் பேசவில்லை?’ என்ற எண்ணம்தான் அவனுள்.

இப்போது அவள் வேலைக்குச் செல்கிறேன் என்று சொன்னபோது பழையபடி அவனிடம் கோபமெல்லாம் இல்லை.

“குட். நீங்களும் உங்க உடம்ப பார்த்துக்கோங்க. அதுவும் முக்கியம்” அவர் சொன்னதும், “இங்க செக் அப் போறதுக்கு நல்ல கைனோ (Gynecologist) சொல்லுங்க டாக்டர்” அவள் கேட்டவுடன், ‘இதுநாள் வரை போகவே இல்லையா’ என்ற எண்ணம் அவனுள்.

மருத்துவரும் மகப்பேறு மருத்துவரைப் பற்றி சொல்லிவிட்டு, இருவருடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றார்.

அவள் கதவை தாழிட்டு திரும்ப, நொடியும் தாமதிக்காமல், அவளை அணைத்துக்கொண்டான் செழியன். அவனின் அணைப்பு இத்தனை நாட்கள் அவன் பட்ட துன்பம், வேதனை, வலியை உணர்த்தியது அவளுக்கு.

அவன் கண்ணீர் அவள் கழுத்தை நனைக்க, “ஸாரி இசை… ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல உன்ன. ரொம்ப ஸாரி” குரல் சரிவர வராமல் கரகரப்புடன் வந்தது.

அதைக் கேட்ட ப்ரியாவின் நெஞ்சம் அடைத்தது. அவளும் அவனுள் புதைந்துகொண்டாள். அவள் கண்களும் கலங்கியது. ஆனால் வரவிடாமல் தடுத்தாள் தன் வேதனை அவனுக்குத் தெரியவேண்டாம், கஷ்டப்படுவான் என்று.

சில நொடிகளுக்குப் பின், “ஏன் இசை இப்படி ஆயிட்ட, ஒழுங்கா சாப்பிடறயா?” அவளை விடுவித்தபடி கேட்க, அவள் தலையசைத்தாள்.

“பேச மாட்டயா? என் மேல கோபமா?” கலங்கிய கண்களுடன் அவன் கேட்க, மறுப்பாக தலையசைத்து, ” நீ சாப்பிட்டிருக்க மாட்ட. சாப்பிடலாமா?” கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவசரமாக தண்ணீரை குடித்தாள் கண்களில் கண்ணீர் வெளிவரக்கூடாது என்று.

இத்தனை நாட்கள் கிட்டத்தட்ட எதிலும் நாட்டம் இல்லாமல், அவன் நல்ல விதமாக திரும்பி வர வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை. அந்த வீட்டில் எங்கு திரும்பினாலும் அவன் அங்கே பட்ட துன்பங்கள் மனதில் வந்து இம்சித்தது.

மனதளவில் இப்படி என்றால் உடளவில் இன்னமும் அதிகம்.

இரண்டாம் மாதம் முடியும் நிலை. காலை சோர்வு, எது சாப்பிட்டாலும் வயிற்றில் நிற்காமல் வெளிவந்து கொண்டிருந்தது.

ஏனோ, அவன் திரும்பி வந்ததும், மனம் மாறி வந்ததும், அவனே தன் குழந்தை என்று விரும்பி அழைத்து சென்றால்தான் செக் அப் செல்லவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். அவள் வீட்டிலும் சொல்லவில்லை.

சில நொடிகள் கழித்து அவள் பின்னே வந்த செழியன், “டாக்டர்ட்ட போலாம் இசை” என்றான்.

குழந்தை வேண்டாம் என்றிருந்தவன் அவளிடம் இதை கேட்டதும், மனதுக்குள் அவன் மாற்றத்தை நினைத்து நெகிழ்ந்த ப்ரியாவிற்கு, சந்தோஷத்தில் இதுவரை கட்டுப்படுத்திய கண்ணீர் மடைதிறந்துவிடும் என்பதுபோல இருந்தது.

அழுகைக்கு துடிக்கும் தன் உதடுகளை கட்டுப்படுத்தி, உடனே சரி என்பதுபோல தலையசைத்தாள்.

அதிகம் அவள் பேசவில்லை. அவள் முடிவெடுத்தது அதுதான்.

‘அவன் மனம்விட்டு அவளிடம் பேச வேண்டும் என்றால், அவள் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தானாக அவன் பேசுவான்’ என்று நினைத்தாள்.

இதுகுறித்து மருத்துவரிடம் பேசியபோது அவர் முதலில் மறுத்தார். இது சில சமயங்களில் ஆபத்தாக முடியலாம் என்று மறுத்தார்.

ப்ரியா அவரிடம், ‘தான் செழியனிடம் நன்றாக பேசியபோது, அவன் அதிகம் பேசவில்லை. அதுவே தான் அமைதியாக அவனைக் கவனித்தபோது, அவன் நிறைய பகிர்ந்துகொண்டான். சிலசமயம் அவன் பேசுவது சம்மந்தமில்லாமல் இருந்திருக்கலாம். அது அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பால் நடந்திருக்கலாம். ஆனால் பலசமயம், நன்றாக பேசினான். தன்னுடைய படிப்பை பற்றி, நட்பை பற்றி, இன்னமும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டான்’ என்றாள்.

மருத்துவர் அதிலுள்ள நிறை குறைகளை அவளுக்கு புரியவைத்தார். அவனிடம் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் இந்த முறையை உடனடியாக கைவிடவேண்டும் என்றார்.

ஆனால் கண்டிப்பாக அவன் மாறுவான் என்று திடமாக அவள் நம்பினாள்.

ப்ரியா இருவருக்கும் உணவு எடுத்துக்கொண்டு வர, அவள் அமைதியை பார்த்த செழியன், ‘தன்னுடைய சில செயல்களினால் அவள் மனம் துவண்டு போயிருக்கும். அதுதான் சரியாக பேசவில்லை. அவள் பழையபடி மாறும்வரை காத்திருப்போம்’ என்று எண்ணினான்.

இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன், அவளை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச்சென்றான்.

மருத்துவர், “இதுவரை எந்த பரிசோதனையும் செய்யவில்லையா? அதுவும் முதல் மூன்று மாதங்கள் எவ்வளவு முக்கியம்? எப்படி இப்படி அலட்சியமாக இருக்கிறீர்கள், படித்தவர்கள்தானே” என்று கடிந்துகொண்டு,

“பை காட்ஸ் க்ரேஸ் எந்த பிரச்சனையும் விசிபில்லா இப்போ தெரியல. மொதல்ல ஸ்கேன் எடுத்துட்டு வாங்க. ஹார்ட் பீட், மத்ததெல்லாம் செக் பண்ணணும்” என்றார்.

இருவரும் மருத்துவர் அறையில் இருந்து வெளிவர, செழியன் மனதில் சின்ன குற்ற உணர்வு. தன்னால்தான் இப்படி ஆகிவிட்டது என்று.

ஆனால் ப்ரியாவுக்கு நம்பிக்கை இருந்தது. உடலளவில் தவறாக எதுவும் இதுவரை தெரியவில்லை. அதனால் கொஞ்சம் தெளிவாக இருந்தாள்.

இருவரும் ஸ்கேன் செய்யும் இடத்திற்குச் சென்றார்கள்.

அவர்கள் மறுத்தும் கேட்காமல், செழியனும் உள்ளே சென்றான். ப்ரியாவிற்கு உள்ளுக்குள் அவனின் ஆசையை பார்த்து சிரிப்பு வந்தாலும், அமைதியாக அவனை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தாள்.

செழியன் ப்ரியாவின் கையை பற்றிக்கொண்டான். அவனுள், எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஒரு சின்ன பயம்.

“என்ன ஸார், உள்ள வரக்கூடாதுன்னு சொல்லியும் கேட்காம சண்டை போட்டுட்டு உள்ள வர்றீங்க. இவ்ளோ ஆசையா இருக்கிறவர், ஏன் ஆறு வாரத்துல எடுக்கவேண்டிய ஸ்கேனை இப்போ எடுக்கறீங்க? ஏன், நீங்க ஊர்ல இல்லையா இல்ல இப்போதான் ஆசை, ஞானோதயம் எல்லாம் வந்துச்சா?” ஹிந்தியில் கேட்டபடி ஸ்கேன் எடுக்க ஆரம்பித்தாள்.

அந்த பெண்ணிற்கு கடுப்பு, சொல்லியும் கேட்காமல் உள்ளே வந்தவனைப் பார்த்து. அதுவும், ஒவ்வொன்றையும் உற்று பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

ப்ரியா ‘என்ன பேச்சு இதெல்லாம்’ என்று கோபப்பட்டு திட்ட வரும்முன், “ஹ்ம்ம். இப்போதான் குழந்தையோட அருமை புரிஞ்சிருக்கு” என்றான் புன்னகையுடன்.

ப்ரியா அவனைப் பார்த்து முறைத்தவண்ணம், “அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சு. இப்போ எதுக்கு தேவையில்லாத பேச்சு?” என்றாள் அரைகுறை ஹிந்தியில். அந்த பெண்ணிற்கு புரியவில்லை.

ஆனால் செழியன் அவள் ஹிந்தியை பார்த்து கிண்டல் செய்வதுபோல சிரித்தான்.

‘அப்பாடா! எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதை பார்ப்பதற்கு’ ஆசையாக அவனைப் பார்த்தாள். கண்கள் மறுபடியும் கலங்கப்பார்த்தது. அமைதியாக கண்களை திரையின் பக்கம் மாற்றினாள்.

அப்போது அந்த பெண் முகம் மலர்ந்து, “ட்வின்ஸ்” என்றாள் இருவரையும் பார்த்து.

கடவுள் வலிகளை மட்டும்தான் இரட்டிப்பாக தருவாரா என்ன? தரவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக தருவார்!

அந்த ஒரு வார்த்தை ‘ட்வின்ஸ்’ என்று கேட்டதும், இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். வார்த்தையால் சொல்லமுடியாத சந்தோஷம் இருவருக்கும். ஒரேசமயம் இருவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.

செழியன் நன்றி கலந்த பார்வையுடன், பற்றியிருந்த அவள் கைகளில் முத்தமிட்டான்!

***

‘என்ன காரியம் செய்யச்சொன்னேன்? யாருமே இல்லை என்று நினைத்த எனக்கு, கடவுள் விலை மதிப்பற்ற முத்தாக மூன்று ரத்தினங்களை அளித்துள்ளார். அவற்றை பொக்கிஷமாக பார்த்துக்கொள்ளவேண்டும்’ மனதில் நினைத்து ப்ரியாவை பார்த்தான்.

அவன் கண்களில் தெரிந்த பல பரிமாணங்களைதான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் என்ன நினைக்கிறான் என்று அவளால் யூகிக்கமுடிந்தது.

அவன் குழந்தை வேண்டாம் என்று சொன்னது, அவனுக்கு ஏற்பட்ட பிரச்சனையால்தானே தவிர, அவனுக்கும் உள்ளுக்குள் ஆசை இருந்தது. அவள் கர்ப்பத்தை குறித்து சொல்லும்போதே அவனின் சந்தோஷத்தை முகத்தில் பார்த்திருந்தாள்.

“ஹார்ட் பீட் கேட்கணுமா?” ஸ்கேன் செய்யும் பெண் கேட்க, இருவரும் பார்வையை அங்கே செலுத்தினர்.

பின் அந்த பெண் போட்டுக்காட்டியவுடன், அதில் கேட்ட துடிப்பை விட செழியனின் இதயத்துடிப்பு அதிகமாக இருந்தது. ப்ரியா ஆசையாக தன் வயிற்றை தொட்டுப்பார்த்தாள்.

“இதுதான் பேபீஸ்” என்று அந்த பெண் திரையில் காட்ட, இருவரும் ஆவலாக பார்த்தனர்.

“வீட்ல ட்வின்ஸ் ஹிஸ்டரி இருக்கா? சிலசமயம் ஹெரிடிடரியா கூட இருக்கும்” அந்த பெண் சொன்னவுடன், ஒரு நொடி அதிர்ந்தாள் ப்ரியா.

அவளுடைய அப்பாவுடன் பிறந்த இரட்டை குழந்தை நோய்வாய் பட்டு, பிறந்த சிலநாட்களில் தவறியதாக ஜெயராமன் சொல்லி கேட்டிருக்கிறாள்.

‘இப்போது இதற்கு ஆம் என்று சொன்னால் செழியன் தன்னுடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்வானே’ என்று எண்ணி, அந்த பெண்ணிடம் இல்லை என்று சொல்லி விட்டாள்.

ஒருவழியாக ஸ்கேன் எடுத்துவிட்டு வெளியே வர, சந்தோஷத்தின் மிகுதியில் இருந்தான் செழியன். ப்ரியாவும்தான். ஆனால் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

அவளை அப்படியே சினிமாவில் வருவதுபோல தூக்கி சுற்றவேண்டும் என்று நினைத்தாலும், தன் நினைப்பை நினைத்து புன்னகைத்துக்கொண்டான், இதுதான் உண்மையான செழியன்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இசை. உன்னால… உன்னால மட்டும்தான்” என்றான் அவளுடன் நடந்துகொண்டே, அவள் முகம் பாராமல், கைகளை மட்டும் பற்றிக்கொண்டு.

“யாருக்குக் கிடைக்கும் சொல்லு இதுபோல ஒரு வாழ்க்கை? இவ்ளோ பிரச்சனை எனக்கு இருக்குனு தெரிஞ்சு எனக்காக என்கூடவே இருக்கயே, உன்ன பிரியணும்னு நினைச்சது என்னோட முட்டாள்தனம். நிறைய இடத்துல நான் நானாவே இல்ல இசை. உன்ன நிறைய பேசியே கஷ்டப்படுத்திருக்கேன். ஸாரி மட்டும் சொல்லி இதை சரிசெய்யமுடியாது இசை” இப்போது அவளைப் பார்த்து சொன்னான்.

“இந்த கொஞ்ச நாள்ல நிறைய கத்துக்கிட்டேன். இனி இன்னொருமுறை உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன் இசை” என்றான் பற்றியிருந்த அவள் கையை அவன் கைகளுக்குள் இருத்திக்கொண்டு.

அவள் மனக்கண்ணில் சிகிச்சைக்கு முன் அவன் எப்படி இருந்தான், பேசினான். இப்போது எப்படி மாறியுள்ளான் என்பதை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அமைதியாக வெளியில் அவனை அவள் பார்த்தாலும், உள்ளுக்குள் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாள்.

“உனக்கு என் மேல வருத்தம், அதுதான் பேச மாட்டேங்கற இசை. நீயா பேசறவரை நான் வெயிட் பண்றேன். வேற யார் பேசலனாலும் பெருசா தெரியாது. ஆனா நீ பேசலனா தாங்கிக்க முடியாது இசை. ரொம்ப காக்க வச்சுடாத ப்ளீஸ்” கவலையுடன் ஆரம்பித்து, கெஞ்சலுடன் தவிப்புடன் பேசி, ஆசையுடன் காதலுடன் முடித்தான்.

‘தனியாக இருந்து பழக்கப்பட்டவனுக்குத்தான் தெரியும் மௌனத்தின் வலி’ அதை உணர்ந்து அவன் பேச, ப்ரியா அவனைப் பாராமல் அவன் பேசுவதை முழுவதும் கேட்டாள். எங்கே அவன் முகத்தைப் பார்த்தால் இத்தனை நாட்கள் கட்டுப்படுத்திய அழுகை வந்துவிடுமோ என்ற எண்ணம்.

அவளுக்கு ஆசையா அவனை இப்படி தவிக்க வைப்பதற்கு? பேசாமல் இருப்பது ஒரு தண்டனை அவளுக்கு, அதுவும் அவனிடம்.

மனதார காதலித்து, பல கனவுகளுடன் அவனையே கரம்பிடித்து, திருமணமான குறுகிய காலத்தில் எல்லையற்ற சந்தோஷத்தையும், மலைதாண்டிய வேதனைகளையும் வலிகளையும் அனுபவித்திருந்தாள்.

இருந்தும் அவன் மீண்டு வந்ததும் அவனுடன் வாழப்போகும் மீதி வாழ்க்கைக்காக, இந்த மருந்தை இருவரும் எடுத்துக்கொண்டாக வேண்டும் என மனதின் வலியை உள்ளுக்குளேயே புதைத்துக்கொண்டாள்.

“டாக்டர்ட்ட ரிப்போர்ட் காட்டலாமா?” கேட்டபடி அவன் பேசியதற்கு பதில் சொல்லாமல் முன்னே சென்றாள். அவனும் அமைதியாக சென்றான்.

ப்ரியாவின் உடல் மிகவும் பலவீனமாகவுள்ளது. கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். சத்தான உணவை தரவேண்டும் என்று மருத்துவர் அறிவுரைகளை கூறி அனுப்பிவைத்தார்.

“சென்னைல இருந்து ஏன் யாருமே வரல? போன் பேசினாங்களா? அவங்களுக்குத் தெரியும்தானே?” அவளிடம் கேட்டுக்கொண்டே அவன் நடக்க, அவள் பதில் சொல்லவில்லை.

அவன் நின்று அவளைப் பார்த்து கேட்டவுடன், இல்லை என்று தலையசைத்தாள்.

“என்ன இசை…? என்ன நினைப்பாங்க? என்கூட சேர்ந்து நீயும் மறைக்க ஆரம்பிச்சுட்ட, கெட்டு போய்ட்டன்னு நினைப்பாங்க. உடனே கால் பண்ணி சொல்லு” என்றான்.

ப்ரியாவிற்கு தேவையான மருந்துக்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்கள். ப்ரியா வீட்டில் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்ல, அவள் அம்மாவிடம் நல்ல திட்டு கிடைத்தது இதெல்லாம் மறைக்கும் விஷயமா என்று.

லட்சுமியும் ஜெயராமனும் சொந்தத்தின் திருமணத்தில் இருந்தனர். அதனால் உடனே புறப்படமுடியவில்லை.

அகிலன், கவிதா, ஸ்வாமிநாதன், வெண்பா நால்வரும் அடுத்தநாள் விடியற்காலை புறப்பட்டு காலை வருவதாக சொன்னார்கள். லட்சுமியும் ஜெயராமனும் மாலை வருவதாக முடிவெடுத்தனர்.

அன்றைய இரவு, அவனே உணவு தயார் செய்து, இருவரும் சாப்பிட்டவுடன், இரண்டு படுக்கையையும் சேர்த்துப்போட்டான்.

ப்ரியா அவனை முறைக்க, அதை பொருட்படுத்தாமல், வேலையிலேயே கவனமாக இருப்பதுபோல அவள் முறைப்பதை தவிர்த்துவிட்டான்.

இரவு மாத்திரைகளை போட்டுக்கொண்டு, “வா இசை படுப்போம்” என்று அவளையும் சாதாரணமாகவே அழைத்தான்.

‘கள்ளன்’ மனதில் நினைத்தவாறு அவள் படுத்தவுடன், அவள் பக்கத்தில் படுத்த செழியன், “இசை… பேச மாட்டியா?” கேட்டபடி அவள் பக்கம் திரும்பினான்.

அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பழைய பயமில்லை. ஆனாலும் பழைய துடிப்பு இல்லை.

மனதில் பல எண்ணங்கள் அவளைக்குறித்து, அதை எதையும் வெளிக்காட்டாமல் சிறிது நேரத்தில் அதே எண்ணங்களுடன் உறங்கிவிட்டான்.

ப்ரியா உறங்குவதுபோல கண்மூடி இருந்தவள், மெதுவாக கண்திறக்க, அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்க்கப் பார்க்க கண்ணீர் துளிர்த்தது. எப்படிப்பட்ட துயரங்கள், மன உளைச்சல்களை அனுபவித்தான். இப்போது இந்த நிம்மதியான உறக்கம்… அது அவளுக்கு நிறைவை தர, கண்களை துடைத்துக்கொண்டு அவன் கைவளைவிற்குள் ஒடுங்கிக்கொண்டாள்.

மனதில் ஒன்றே ஒன்றுதான். இது ஆயுளுக்கும் நிலைக்கவேண்டும். வேறெதுவும் வேண்டாம் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு, பல நாட்களுக்கு பின் அவனின் அருகாமையில் நன்றாக, நிம்மதியாக உறங்கினாள்.

அடுத்தநாள் காலை அவனே முதலில் விழித்தெழுந்தான். தன்னை பற்றிக்கொண்டு உறங்கும் தன் மனைவியை ஆசையாக பார்த்தான்.

அவள் உறக்கம் தடைபடாமல் அவளை மென்மையாக கட்டிக்கொண்டு, சில நிமிடங்கள் இத்தனை நாட்கள் இழந்த அந்த ஸ்பரிசத்தை ரசித்த செழியன், அவள் நெற்றியில் பல நாள் கழித்து முத்தமிட்டு, மணியை பார்த்தான்.

இன்னும் சில மணிநேரங்களில் சென்னையில் இருந்து வந்துவிடுவார்கள் என எண்ணி, காலை வேலைகளைப் பார்த்தான்.

மனதில் ஒரு முடிவு எடுத்திருந்தான். ‘தனக்கு நடந்ததை ப்ரியாவின் வீட்டில் கண்டிப்பாக சொல்லவேண்டும். இதுபோல விஷயத்தை மறைப்பது சரியில்லை. அதுவும் அவர்கள் பெண்ணின் வாழ்க்கை இது’ என்று நினைத்தான்.

ப்ரியாவும் தூக்கத்தில் இருந்து விழித்தெழ, செழியன் புன்னகையுடன், “மார்னிங் இசை” என்றான் மலர்ந்த முகத்துடன் அவள் எதிரே உட்கார்ந்துகொண்டு அவளையே பார்த்தவண்ணம்.

ஒருநொடி அந்த புன்னகையில் மூழ்கி, பின் அவள் சின்னதாக புன்னகைக்க, “ஹெச்ஓடி நேத்தே பார்க்கணும்னு சொன்னாரு. ஆனா போக முடியல. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன். நீ அவங்கள ரிஸீவ் பண்ணு, நான் சீக்கிரம் வந்துடறேன்” என்றவன், “காலைக்கு சமைச்சிட்டேன். நான் சாப்ட்டாச்சு, நீயும் ஒழுங்கா சாப்பிடணும்” என்றதும் ப்ரியா தலையசைத்தாள்.

அவள் தூக்க கலக்கத்தில் இருப்பதை பார்த்தவன், குனிந்து அவள் தலையோடு தலை முட்டி புன்னகையுடன், “சீக்கிரம் ஃபிரெஷ் அப் ஆயிட்டு சாப்பிடு. நான் வந்துடறேன்” சொல்லிவிட்டு புறப்பட்டான்.

அவன் சென்றவுடன் ப்ரியா இதழ் விரித்து புன்னகைத்தாள் அவன் செய்ததை நினைத்து.

அடுத்து கொஞ்ச நேரத்தில் அகிலன், கவிதா, ஸ்வாமிநாதன் வீடு வந்து சேர்த்தனர். வந்ததும் ஏன் சொல்லவில்லை என்று அவர்கள் குறைபட்டுக்கொள்ள, ப்ரியா புன்னகையுடன் அமைதியாக இருந்தாள். மனதில் அத்தனை கோபம்.

வந்தவர்களை கவனித்தபின், “ஏன்டா ஒரு மாதிரி இருக்க? ஏதாச்சும் பிரச்சனையா? செழியன் எங்க?” அகிலன் கேட்க, ப்ரியா வெற்றுப்புன்னகையுடன், “பரவால்லயேண்ணா என்னை பார்த்தே ஏதோ சரியில்லைன்னு சொல்ற. ஹ்ம்ம். பாவம் இளாக்குதான் அதுபோல அவனை புரிஞ்சிக்க யாரும் இல்ல” என்றாள் கவிதாவையும் ஸ்வாமிநாதனையும் பார்த்தவண்ணம்.

மூவரும் ஒன்றும் புரியாமல் பார்க்க, “எனக்கு இவங்கள கேள்வி கேட்க உரிமை இருக்கானு தெரியலண்ணா, உன்ன கேட்க உரிமை இருக்குனு நினைக்கறேன். ஏன்ண்ணா, நானும் அண்ணியும் இணக்கமா இருக்கணும்னு ஆரம்பத்துல இருந்து என்னை அவங்ககிட்ட நல்லா பழக சொன்ன உனக்கு, அதுபோல நீயும் அவங்க தம்பிகிட்ட பழகணும்னு ஏன்ணா தோனல?

அவன் ரிசெர்வ்ட்டா இருந்தா என்ன? நீ அப்படி இல்லையேண்ணா. நீ நல்லா சகஜமா பேசியிருக்கலாமே. நீ அவன்கிட்ட கொஞ்சம் பேசின, நான் இல்லனு சொல்லல… ஆனா இன்னமும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கலாமே.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்னு சொல்வாங்க. நீ நினைச்சிருந்தா செய்திருக்கலாமே… ஆனா, எனக்கு அவனை பிடிச்சிருக்குனு தெரிஞ்சவுடனே அவன்கிட்ட நீ நல்லா பேசின இல்ல? கல்யாணத்துக்கு அப்புறம், மனைவி குடும்பமும் நம்ம குடும்பம்னு நினைக்கற ஆள் நீ. ஆனா அதுல இளாவும் இருக்கான்னு மறந்துட்டல்ல.

உன் காலேஜ் ஃபிரண்ட் பானுக்கா இறந்தப்ப, நீ எவ்ளோ டிப்ரஷன்ல இருந்த, அப்போ நாங்கெல்லாம் உன் கூட இருந்தோம்… முக்கியமா அப்பா, அம்மா. ஆனா, இளா நிலைமை என்னாச்சு தெரியுமாண்ணா? எல்லாரும் பக்கத்துல இருந்தும், அவனுக்குனு யாருமே இல்லாத நிலைமை. நீ அண்ணிகிட்ட சொல்லியிருக்கணும்ண்ணா, கூட பிறந்தவங்களும் முக்கியம்னு” அவள் உதடுகள் துடித்தது அழுகை வருவதற்காக.

இவர்கள் அனைவரும், ப்ரியா உற்பட, அறிந்தோ அறியாமலோ செழியனின் நிலைமைக்கு காரணம் என்பதால் பேச ஆரம்பித்தாள். இதுவரை அண்ணன் அகிலனை நேராக கேட்ட ப்ரியா, அடுத்து மற்ற இருவரையும் மறைமுகமாக கேட்க ஆரம்பித்தாள்.

“சுத்தி ஆட்கள் இருந்தும்… அன்புனு ஒன்னு கிடைக்காம வாழ்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுமாண்ணா? அந்த வலிய இளா அனுபவிச்சான். இழக்கக்கூடாத வயசுல அம்மா போய்ட்டாங்க. கூடவே இருந்த அக்காவும் போய்ட்டா. அப்பான்னு ஒருத்தர் இருந்தார், ஒரு ஏடிஎம் மெஷின் போல. அந்த வயசுல பசங்களுக்கு தேவை பாசம். அதுவும் அம்மா இல்லாத பசங்களுக்கு அப்பா மட்டும்தான். ஆனா ஒன்னு இதுல இருந்து நாங்க கத்துக்கிட்டோம், ஒரு குழந்தையை எப்படி வளர்க்கக்கூடாதுனு” ஏளனமாக அவள் சொல்ல, ஸ்வாமிநாதன் முகம் இருண்டது.

“யார் பாசமும் கிடைக்காம, அம்மா, அக்காவை இழந்து, ஸ்கூல்ல பசங்க ஒதுக்கிவச்சு, அந்த சின்ன வயசுல என்னன்னே சொல்லத்தெரியாத ஒரு மன அழுத்தம் அவனுக்குள்ள. இதெல்லாம் யாருக்காச்சும் தெரியுமா?” அண்ணனிடம் பேசுவதுபோல பேசினாலும், ப்ரியாவின் கண்கள் ஸ்வாமிநாதனை மட்டுமே பார்த்தது.

“இதெல்லாம் கடந்து வர்றதே பெரிய விஷயம். ஆனா, இளா வெளிய வந்தான். அதுக்கப்புறம் இன்னொரு அடி. இதோ அண்ணி, இவங்கள கல்யாணம் பண்ணிட்டு நீ கூட்டிட்டு போய்ட்ட. அவனோட க்ளோஸ் ஃபிரண்ட் அந்த பொண்ணும் போய்ட்டா. ரெண்டு பேர் வாழ்க்கையும் சரியில்லாம போச்சேனு அடுத்த மன அழுத்தம். அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியுமாண்ணா?

சிவியர் டிப்ரஷன். உனக்கு நாங்க இருந்த மாதிரி, அவனுக்கு யாருமே இல்ல. அது டிப்ரஷன்னே தெரியாம இருந்திருக்கான். இதுல காமெடி என்னன்னா… அது கூட இருந்த அப்பாவுக்கும் தெரியல. கூட பொறந்த அக்காவுக்கும் தெரியல.

ஆனா பாரேன், அவன் ரொம்ப ஸ்ட்ராங். இதையும் கடந்து வந்தான். எந்த ஒரு துணையும்… யார் துணையும் இல்லாம, தனியாவே சமாளிச்சு வெளிய வந்தான். அடுத்த பிரச்சனை அவனுக்கு என் ரூபத்துல… கல்யாணம்ங்கற பேர்ல வந்துடுச்சு. அப்போ மாமா தன் பையன்னு கூட பார்க்காம மட்டம் தட்டி பேசினாரு.

ஏன் மாமா, படிக்கறது அவ்ளோ பெரிய தப்பா? பிஹெச்டி அவ்ளோ சீக்கிரம் யாராலயும் படிக்க முடியாது மாமா. அவன் மாஸ்டர்ஸ்ல யூனிவர்சிடி செகண்ட், தெரியுமா? சாதாரண யூனிவர்சிடில இல்ல… இந்தியாலயே ஒன் ஆஃப் தி டாப் காலெஜ்ஸ்ல… அதுவும் வேல பார்த்துட்டே படிச்சுட்டு. இவ்ளோ திறமையோட யாராச்சும் ஒருத்தங்கள சொல்லுங்க பார்ப்போம்? ஆனா, நீங்க எப்படியெல்லாம் பேசினீங்க, அடுத்த பிரச்சனை அங்க ஆரம்பிச்சது” இதை சொல்ல சொல்ல தொண்டை அடைத்தது அவளுக்கு. தன்னை சமநிலை படுத்திக்கொண்டாள்.

“உங்க எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணணும், என்னை நல்லா பார்த்துக்கணும்னு வேலை எடுத்து பார்த்து பார்த்து, கொஞ்சம் கூட தூங்காம, அதுனால மன உளைச்சல் அதிகமாகி, அது அவனை ரொம்ப பாதிச்சு, கடைசியா இப்போ ட்ரீட்மெண்ட்ல முடிஞ்சிருக்கு. அவன் எந்த நிலைமைல இருந்தான் தெரியுமா நான் இங்க வந்தப்போ? இது எல்லாத்துக்கும் அவன் ஒரு துளிக்கூட ரீசன் கிடையாது. அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது நம்ம மட்டும்தான்… வேற யாரும் இல்ல… நம்ம மட்டும்தான்” ப்ரியா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள். இத்தனை நாட்கள் கட்டுப்படுத்தி வைத்தது இன்று வெளிவந்தது.

இப்போது அகிலன் பேச்சற்று பார்த்தான் ப்ரியாவை. பேயடித்தாற்போல இருந்தாள் கவிதா. கிட்டத்தட்ட நெஞ்சுவலி வந்ததுபோல இருந்தார் ஸ்வாமிநாதன்.

அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் இருக்க, இதை அனைத்தையும், வெளியில் கண்கள் மூடி, சுவரில் சாய்ந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான் செழியன்!

இது அனைத்தும் அவன் மனதில் இருந்தது, அனைவரையும் கேட்கவேண்டும் என்று நினைத்தது, ஆனால் எப்பொழுதும்போல மனதில் அனைத்தையும் புதைத்துக்கொண்டான்.

ப்ரியா பேசியதை முழுவதும் கேட்டபின், இப்போது அவனிடத்தில் முன்புபோல மன அழுத்தம் இல்லை. மனம் முழுவதும் பிரமிப்பு மட்டுமே, . தன் துணைவியை நினைத்து, தன்னில் சரிபாதியை நினைத்து… தன்னுடைய தனிப்பெரும் துணையை நினைத்து!

3
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved