தனிப்பெரும் துணையே – 13

தனிப்பெரும் துணையே – 13

புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்த செழியன், இந்துமதி பேசுகிறாள் என்று தெரிந்ததும், அவன் பேச ஆரம்பிக்க,

“செழியா சாரிடா. என்னை கூப்பிட்டிருப்பன்னு தெரியும். வீட்ல போன் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டாங்கடா. இப்போ ஃபிரண்ட் நம்பர்ல இருந்துதான் கால் பண்றேன்” என்றதும், “என்னாச்சு இந்து? ஏன் ஒரு மாதிரி பேசற?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க செழியா” அவள் சொன்னதும் அதிர்ந்தான் செழியன்.

“காலேஜ்ல ஒருத்தன் லவ் பண்றேன்னு ரொம்ப டார்ச்சர் பண்ணான். வீடுவரை பின்னாடியே அடிக்கடி வந்தான். ஒரு நாள் இதை வீட்ல பார்த்துட்டாங்க. என்னை கேட்டப்ப, நான் தப்பா எதுவும் இல்லன்னு சொன்னேன். ஆனா யாருமே நம்பலை. அப்போ சரியா அவன் எனக்கு கால் வேற பண்ணிட்டான். அதுவரை போன்ல அவன் கூட நான் பேசுறது கூட இல்லடா.

நான் எவ்ளோ சொல்லியும் வீட்ல நம்பாம, லவ் பண்ணி ஓடிப்போகப் போறயான்னு சொல்லி ஒரே அடி. போன்லாம் பிடிங்கி வச்சுட்டாங்க. படிச்சதெல்லாம் போதும்னு சொல்லி காலேஜ் கூட அனுப்பல. அப்புறம் மாமாவோட சீக்கிரம் கல்யாணத்த முடிச்சிட்டாங்க. நான்தான் மாமாகிட்ட கெஞ்சி இப்போ எக்ஸாம் எழுத வந்தேன். அவர் காலேஜ் வாசல்லதான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு” என்று அவள் சொல்ல சொல்ல, செழியனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

அவள் வீட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள் என்று தெரியும் அவனுக்கு. இருந்தும் பெற்ற பெண்ணை நம்பாமல் இப்படியா செய்ய வேண்டும் என நினைக்க, அவள் தொடர்ந்தாள்.

“அத்தை வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட் செழியா. போன்லாம் அதிகம் பேசவே கூடாது. அதுவும் பசங்ககூடனா அவ்ளோதான். உன் கூட இனி பேசறது கஷ்டம்டா” அவள் எப்போது ‘உன்னுடன் பேசுவது கஷ்டம்’ என்று சொன்னாளோ அப்போதே செழியன் முகம் முற்றிலுமாக மாறியது. மன அழுத்தம் அதிகமானது.

“ஏதாவது பேசு செழியா, எனக்குத் தெரியும் உனக்கு கஷ்டமா இருக்கும்னு. நம்ம ஊர்ல கல்யாணம் ஆன பாதி பொண்ணுங்களோட தலைவிதி இதுதான். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டு வீடே கதின்னு இருக்கணும். ப்ச். சரி நான் எக்ஸாம் ஹாலுக்கு போறேன். முடிஞ்சு வந்தவுடனே இந்த நம்பர்ல இருந்து திரும்ப கூப்பிடறேன். பைடா” என போனை வைத்துவிட்டாள்.

செழியன் கண்கள் கலங்கியது. ‘தனக்கு மட்டும் நல்லதே நடக்காதா, இருந்த ஒரு தோழியும் இப்போது இல்லை. என்ன வாழ்க்கை இது’ என்ற மன வலியுடன் தேர்வுக்குச் சென்றான்.

இவன் செய்த ப்ராஜெக்ட் மிகவும் தனித்துவமாக இருந்தது. வைவா நடத்த வெளியில் இருந்து வந்த தேர்வாளர்கள் (examiner) முன்பு, ‘தங்கள் மாணவன்’ என்று சொல்லி செழியனுடைய ஆசிரியர்கள் பெருமைப்பட்டனர்.

ஆனால் செழியன் காதுகளுக்கு எதுவுமே எட்டவில்லை. ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்ற ஒரே கேள்வி மனதுள். அழுத்தம் இன்னமும் அதிகமானது போல ஒரு உணர்வு.

செழியனுடைய ப்ராஜெக்ட் பார்த்து ஆச்சர்யத்துடன், தேர்வாளர் அவனை கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஆனால் பதிலேதும் வரவில்லை அவனிடமிருந்து.

மறுபடியும் அவனை கேள்வி கேட்க, அவனால் பதில் சொல்ல முடியாமல் விழிக்க, பக்கத்தில் இருந்த அவன் ஆசிரியர், “சொல்லு செழியன். இதுக்காக நீ நிறைய எஃபெர்ட் போட்டுருக்க. சொல்லு” என்றார்.

செழியனுக்கு சுத்தமாக blank out ஆனதுபோல இருந்தான். எதுவுமே தோன்றவில்லை.

“நீங்கதான் இதை பண்ணீங்களா? இல்ல பணம் குடுத்து வெளிய பண்ணீங்களா?” அமைதியாக இருந்த செழியனை பார்த்து, தேர்வாளர் கொஞ்சம் கடுமையுடன் கேட்டார்.

“நான்தான் பண்ணினேன். பட் எதுவும் ஸ்ட்ரைக் ஆகமாட்டேங்குது” வெற்றுமுகத்துடன் அவன் சொல்ல, அவனுடைய ஆசிரியர் தேர்வாளரிடம் செழியனை பற்றியும், அவன் திறமையை பற்றியும், இதுவரை எடுத்த மதிப்பெண்கள் பற்றியெல்லாம் சொன்னார்.

இருந்தும் வந்தவர் திருப்தியடையவில்லை. மிகவும் குறைவான மதிப்பெண்களை வழங்கினார்.

ஆனால் செழியனோ, ‘சந்தோஷம் இல்லாத வாழ்க்கையில் படித்து மட்டும் என்ன பயன்?’ என்ற மன நிலைக்குத் தள்ளப்பட, ‘இல்லை அம்மா நன்றாக படிக்கச் சொன்னார்’ என்று மூளை அறிவுறுத்த, மண்டையே வெடிப்பது போல் உணர்ந்தான்.

“என்ன செழியன் இது” என்று ஆசிரியர் குறைபட்டுக்கொள்ளத்தான் முடிந்தது. அவரால் முடிந்தவரை முயற்சித்தார். கண்டிப்பாக ப்ராஜக்ட் மதிப்பெண்கள் அவனுக்கு குறைந்துவிடும் என்று வருத்தப்பட்டார்.

இந்த சிலநாட்களாக இந்துமதியிடம் பேசாமல் இருந்ததால் இப்போது பேசாதது பெரிதாக தெரியவில்லை. ஆனால் இனி அவளுடன் பேசவே முடியாது என்பதுதான் கஷ்டமாக இருந்தது அவனுக்கு.

இதே மனநிலையில் வீட்டிற்குச் சென்றால் அங்கே கவிதாவின் சோகமான முகம். இந்துமதியை மறந்து கவிதாவின் நிலையை பற்றி கவலைப்பட ஆரம்பித்தான்.

அவன் ஓரளவு பேசும் இருவரின் வாழ்க்கையிலும் இப்போது சந்தோஷம் இல்லையே என்கிற வருத்தமும் சேர்ந்துகொண்டது.

அடுத்த ஒரு வாரத்தில் கல்யாணம். ஆனால் கவிதாவின் முகத்தில் துளிக்கூட புன்னகை இல்லை.

‘அக்காவின் நிலைமைக்கு அகிலன்தான் காரணம். அகிலனே இப்படி என்றால் இன்னும் அவன் வீட்டில் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? அவன் அம்மா அக்காவை கொடுமை படுத்துவார்களோ? அவனை போலத்தானே இருப்பார்கள். எதற்கு அக்காவிற்கு இப்படி ஒரு திருமணம்?’ என வருந்தினான்.

‘அகிலனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று அப்பா சொன்னாரே. ஒருவேளை அவளும் அகிலனை போலத்தான் இருப்பாளோ? அக்காவை இழிவு படுத்திவிடுவாளோ?’ என நினைத்தான்.

ஆனால் அவன் நினைப்பை பொய்யாக்க வந்தாள் இசைப்ரியா!

கல்யாணத்திற்கு இரு தினங்களுக்கு முன், ‘சடங்குகள் செய்யவேண்டும்’ என அகிலனின் குடும்பம், மற்றும் சில உறவினர்கள் கவிதாவின் வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்தனர்.

அகிலன் சாதாரணமாக நடந்து கொண்டான்.

‘கல்யாணம் வேண்டாம் என்பானாம். ஆனால் எதுவுமே நடக்காதது போல இருப்பானாம். எப்படி முடிகிறது இப்படி நடந்துகொள்ள. அத்தனையும் மாப்பிள்ளை என்கிற திமிர்’ என மனதில் அகிலனை அர்ச்சனை செய்தான் செழியன்.

ஸ்வாமிநாதன் செழியனிடம் வந்தவர்களை பார்த்துக் கொள்ளச் சொன்னார். அவனும் அந்த வேலையில் இறங்கினான். வந்தவர்களுக்கு காபியை தந்தான்.

‘அக்கா ஏதாவது குடித்தாளா? சாப்பிட்டாளா? என்று தெரியவில்லையே’ அவனுக்கு திடீரென ஞாபகம் வர, காபி ட்ரே எடுத்துக்கொண்டு கவிதாவின் அறை அருகில் சென்றபோது,

“என்ன அண்ணி நீங்க, எதுவும் குடிக்காம கொள்ளாமவா இருப்பீங்க? இந்த வீட்ல உங்கள கவனிக்க யாருமே இல்ல. கவலைப்படாதீங்க, நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. அண்ணா சூப்பரா பார்த்துப்பார்” என்ற குரல் கேட்டது.

முதலில் ‘அண்ணி’ என்று சொன்னதை கேட்ட செழியன் முகம் கோபத்திற்கு மாறியது. அகிலனின் தங்கை அக்காவுடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என.

பின், அவள் கவிதாவிடம் காட்டிய அக்கறை, அவனுள் ஏதோ ஒரு சின்ன நிம்மதியை தந்தது. ‘தான் நினைத்தது போல இல்லை இவள்’ என நினைத்து.

அடுத்து, ‘என் அண்ணன் நல்லா பார்த்துப்பார்’ என்று அவள் சொன்னதும், ‘கல்யாணம் வேண்டாம் என நிறுத்த சொன்னவன் எப்படி நன்றாக பார்த்துக் கொள்வான்’ என அவன் நினைக்கும் போது,

உள்ளே, “நான் போய் குடிக்க ஏதாச்சும் மொதல்ல குடுத்தனுப்பறேன் அண்ணி. சாப்பிட என்ன இருக்குன்னு பார்த்து எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி முடிக்கும்போது, செழியன் முன் நின்றாள் ப்ரியா.

கையில் காபி ட்ரேயுடன், பழைய சட்டையுடன், தோளில் துண்டுடன் நின்ற செழியனிடம் ப்ரியா, “ஏப்பா தம்பி, அப்போ இருந்து பார்க்கறேன்… காபி எல்லாருக்கும் தர. ஆனா கல்யாண பொண்ணு ஒன்னும் குடிக்காம இருக்காங்க. போ போ… போய் குடு” என்றவுடன், ‘தம்பியா?!’ என செழியன் ஒருவிதமாக அவளையே பார்த்தான்.

அடுத்து அவள், “ஆமாம் இங்க சமையல் எங்க செய்றாங்க?” சுற்றி பார்த்துக் கொண்டே கேட்க, செழியன் கையை நீட்டினான்.

“சரி சரி அப்படியே மந்தமா நிக்காத. சீக்கிரம் காபிய குடு. நான் போய் என்ன சாப்பிட இருக்குன்னு பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

முதலில் அவளைப் பார்த்து முறைத்தான். பின் மனதில், ‘இத்துனுண்டு இருந்துட்டு இவ என்ன பேச்சு பேசறா? மந்தம்னு வேற சொல்றா, அவ்வளவும் திமிர் அண்ணனைப் போலவே’ அவளை நினைத்து சிறிய நூலிழை புன்னகையுடன், கவிதா அறைக்குள் சென்றான்.

***

அகிலன் திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. மேல்தளத்தில், அவன் அறையில் இருந்த பையை எடுக்க வந்தபோது, சில பெண்களின் குரல் வெளியே கேட்க, அதில் ப்ரியாவின் குரலை மட்டும் கண்டுகொண்டான்.

அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது உள்ளே. அதுவும் அவனைப் பற்றித்தான்.

‘அண்ணியின் தம்பி ஏதோ நேற்றுதான் வயதுக்கு வந்ததை போல, கண்ணில் படவே இல்லை… அவனை இதுவரை பார்த்ததில்லை’ என ப்ரியா அவள் சகாக்களுடன் பேசிக்கொண்டிருக்க, ‘என்ன வாய்டா…’ என எண்ணிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான் செழியன்.

ப்ரியாவும், அவள் உடனிருந்தவர்களும் அவனைப் பார்த்தார்கள். அவன் ப்ரியாவை பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர, அங்கு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ‘அவன் பார்க்க எப்படி இருக்கிறான்’ என்பதை குறித்து.

‘அவன் சுமாரா இருக்கானா? உன் டேஸ்ட் ஏன் இவ்ளோ மட்டமா போச்சு’ அந்த பேச்சுவார்த்தைக்கான முடிவை ப்ரியா தர, சட்டென திரும்பிப் பார்த்தான் செழியன்.

அனைவர் முகத்திலும், ‘தாங்கள் பேசியது அவன் காதில் விழுந்திருக்குமோ’ என்ற ஒரு சின்ன கலக்கம் தெரிய, ப்ரியா மட்டும், ‘கேட்டா கேட்டுட்டு போகட்டும். எனக்கென்ன’ என்பதுபோல பார்த்தாள்.

‘உடம்பு முழுக்க திமிர்’ என நினைத்துக் கொண்டே அவன் படியிறங்க, ஏனோ அவளின் அந்த அலட்சியத்தைத் தவறாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை.

அன்றைய இரவு, அகிலன் குடும்பம் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க, மேலே இருந்து ப்ரியாவும், அவளுடன் இருந்தவர்களும் இறங்கும் போது, அவர்களுக்கு வழியை விட்டான் செழியன்.

அப்போது ப்ரியா அவனைக் கடந்து செல்லாமல், திடீரென நின்றாள்.

‘ஒருவேளை பேசியதற்கு மன்னிப்பு கேட்பாளோ?!’ என அவன் நினைக்க, அவள் நின்ற தோரணையை பார்த்து, ‘மன்னிப்பா! இவளா?’ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

அவன் நினைத்தது போலவே, அவள் அவனிடம் நீளமாக பேசிவிட்டு, ‘கல்யாணத்திற்கு நன்றாக உடை அணிந்தால் பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாராவாவது இருப்பாய்’ என கிட்டத்தட்ட, ‘செய்தே ஆக வேண்டும்’ என்பதுபோல சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

அவள் கூறியவற்றை எண்ணிக்கொண்டே மேலே சென்றான்.

அவள், ‘இளா’ என்றழைத்தது, அவள் காலையில், ‘அவனை வேலை செய்பவன்’ என்று பேசியதற்கு விளக்கமளித்தது, ‘சொந்தம்’ என்ற உரிமையோடு பேசியது, பின் ‘அவள் சொன்னதை மறக்க வேண்டாம்’ என்று சொன்னது, என்பதை அவன் நினைக்கையில் முகத்தில் ஒரு கீற்றாக புன்னகை படர்ந்தது.

‘அவ்ளோ மோசமாவா இருக்கேன்’ என்று கண்ணாடி முன் நின்று பார்த்தான். அவனுக்கே அப்போதுதான் தெரிந்தது, சட்டை மிகவும் பழையது என.

‘ஏன் இதை போட்டோம்?’ என யோசித்தான். பதில் தெரியவில்லை.

‘அக்கா கூட எதுவுமே சொல்லவில்லையே’ என நினைக்கும்போது, ‘அவள் இருக்கும் மனநிலையில் மறந்திருப்பாள்’ என்ற முடிவுக்கு வர, இப்போது அகிலன் நினைவிற்கு வந்தான்.

‘அக்கா அவனால்தான் இப்படி சுற்றம் மறந்து இருக்கிறாள்’ என்று அவன் மீது கோபம் வர, அடுத்த நொடி, ‘அவன் தங்கை ப்ரியா கொஞ்சம் வாய் அதிகம் பேசினாலும், அண்ணனைப்போல இல்லை’ என்று கடைசியாக ப்ரியாவிடம் வந்து நின்றது அவன் மனம்.

திருமணத்திற்குத் தந்தை எடுத்துக்கொடுத்த உடையை பார்த்தான். அடர் சிவப்பு நிறச்சட்டை.

‘இதை அணிந்தால் நன்றாக இருப்பேனா?’ என நினைக்கத்தோன்ற, ‘இதுபோலவெல்லாம் இதற்கு முன் நினைத்ததில்லையே. இதென்ன புதிதாக’ மூளை யோசிக்க, மனதில் மறுபடியும் ப்ரியா.

இவ்வாறாக அடுத்த ஓரிரு நாட்களும் ப்ரியா நினைப்பு எப்போதாவது வந்தாலும் கல்யாண வேலைகள் அவனை சூழ்ந்தது.

அதிகாலை திருமணத்திற்காக கோவிலுக்குக் கிளம்பத் தயாரானான். தந்தை எடுத்துத்தந்த சட்டை ஏதோ மைனர், ஜமீன்தார் உடுத்துவதுபோல இருத்தது.

‘இதை அணிந்து மறுபடியும் அவள் கிண்டல் செய்ய வாய்ப்பு தரக்கூடாது’`என நினைத்து… இந்துமதியுடன் சென்றபோது எடுத்த ஒரு லினன் சட்டையை அணிந்தான்.

இப்போது இந்துமதி மனதில் வந்து நின்றாள். அக்காவின் கல்யாணத்திற்கு அவளை அழைக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தான். ஆனால் அவளுக்கே திருமணம் முடிந்தது.

‘அவள் மாமியார் கொஞ்சம் கடுமையானவர் என்று சொன்னாளே. அக்காவின் மாமியார் எப்படிப்பட்டவராக இருப்பார்? அக்காவை கஷ்டப்படுத்துவாரோ, கல்யாணத்திற்கு பின் அக்கா எப்படி இருக்கிறாள் என்று எப்படி தெரிந்துகொள்வது?’ என நினைக்கையில், ப்ரியா மறுபடியும் மனதில் வந்தாள்.

‘ப்ரியாவிடம் கேட்கலாமா?’ என ஒருபுறம் நினைக்கத் தோன்றினாலும், ஏதோ தயக்கமும் இருந்தது.

கோவில் சென்றடைந்த கொஞ்ச நேரத்தில் அகிலன் குடும்பம் வந்துவிட்டது என்ற செய்தி வர, செழியனையும் வரவேற்க அழைத்துச்சென்றார் ஸ்வாமிநாதன்.

முதலில் அகிலன் வந்த கார் நிற்க, அவன் கண்கள் தானாக ப்ரியாவை தேடியது. அவள் அடுத்த காரில் வந்திறங்கியவுடன், ஒரு நொடி அவளைப் பார்த்தான்.

அவள் கண்கள் அவனைப்பார்த்ததும் ஒரு சின்ன மலர்ச்சியை காட்டியது. அது அவனுக்கு இதமாக இருந்தது.

மறுபடியும் அவளைப் பார்க்க, இப்போது அகிலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். முதல் முறை ஒரு பெண் அவன் கண்களுக்கு அழகாகத் தெரிந்தாள். இதுபோன்ற நினைப்பெல்லாம் இதுவரை வந்ததில்லை.

அளவான ஒப்பனை, அழகான புடவை, தேவைக்கேற்ப நகை, ஆடம்பரமில்லாத அழகுடன் இருக்கிறாள் என அவன் எண்ணங்கள் ஓட, அது அவனுக்கு புரிந்ததும், தன்னையே திட்டிக்கொண்டான்.

அவன் அந்த இடம்விட்டு நகர்ந்தவாறு, ‘தறிகெட்டு சிந்தனைகள் செல்கிறதே. இதுபோல நினைப்பதெல்லாம் தவறு. இது அவளுக்குத் தெரிந்தால், ஐயோ’ என நினைக்கையில்,

“அண்ணி எங்க இருக்காங்க? என்னை கூட்டிட்டுப்போங்க” என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்தாள் ப்ரியா.

நொடிப்பொழுது அவளைப்பார்த்து நின்றாலும், உடனே அவளை அழைத்துச்சென்றான்.

மறுபடியும் அவள் ஆரம்பித்தாள் பேசுவதற்கு, கூடவே அவனை கிண்டல் செய்துகொண்டே இருக்க, மனதில் அவள் பேசுவதை ஒரு பக்கம் ரசித்தாலும், ரசிக்கும் தன் மனதை திட்டிக்கொண்டே அவளுடன் நடந்தான்.

திடீரென அவன் முன் நின்று, “பேச வருமா வராதா?” என அவள் திட்ட ஆரம்பிக்க, அவளை நிறுத்தச்சொன்ன செழியன், கவிதா இருக்கும் இடத்தைக் காட்டினான்.

அதில் கடுப்படைந்த ப்ரியா, அவனை திட்டிவிட்டு கோபமாக நடக்க, புடவை தடுக்கி தட்டுத்தடுமாறி நடந்தாள்.

அவளின் செய்கை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. ‘குட்டிச் சாத்தான் பேசிட்டே இருக்கு. புடவை கட்டிட்டு எங்கயாச்சும் விழாம இருந்தா சரி’ என சிரித்துக்கொண்டே அவன் செல்ல, அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

இந்துமதி முதலில் அழைத்திருந்த எண்கள். உடனே எடுத்தான்.

அந்தப்பக்கம், “செழியா, அக்காக்கு என்னோட விஷஸ் சொல்லிடுடா. இன்னைக்குதான் லாஸ்ட் எக்ஸாம். மறுபடியும் காலேஜ்க்குச் செர்டிபிகேட் வாங்கதான் வருவேன்” என்றதும், இதற்கு முன் இருந்த மனநிலை மாறி, “நீ எப்படி இருக்க இந்து?” என்றான் கவலையாக.

“இருக்கேன்டா. இருபத்திநாலு மணிநேரத்துல பதினஞ்சு மணிநேரம் வீட்டு வேலை. எப்பவும் இதுதெரியல அதுதெரியலன்னு திட்டு. ஏதோ போகுது. அக்கா கல்யாணம் பண்ணி போகப் போற குடும்பம் பரவால்லயா செழியா?” இந்துமதி கேட்க, முன்புபோல இருந்திருந்தால் அகிலனைப் பற்றி சொல்லியிருப்பான்.

ஏனோ அந்த வீட்டில் ப்ரியா இருப்பது ஒரு சின்ன மனநிறைவை தர, பதிலுக்கு நல்ல குடும்பம் என்றான். அவளும் சில வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிட்டாள்.

ஆனால் செழியன் இந்துமதிக்காக மிகவும் வருந்தினான். அவள் குரலே காட்டியது அவள் சந்தோஷமாக இல்லை என.

அதே எண்ணங்களுடன் அவன் இருக்க, மணமேடையில் கவிதா சிறு துளி புன்னகையில்லாமல் உட்கார்ந்திருந்தது, இன்னமும் மனவருத்தம் தந்தது.

‘அக்காவும் இந்துமதிபோல கஷ்டப்படுவாளோ?’ என நினைத்தபோது, கவிதா பக்கத்தில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள் ப்ரியா.

அவளைக் கவிதாவுடன் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு சின்ன மனநிறைவு அவனுக்கு. கடவுளிடம் மனமார வேண்டிக்கொண்டான் கவிதாவுக்காகவும் இந்துமதிக்காகவும்.

அடுத்தநாள் அகிலன் வீட்டு குலதெய்வம் கோவிலுக்கு இரு குடும்பமும் சென்றிருக்க, செழியனுக்கு நிறைய வேலை இருந்தது. தண்ணீர், சாப்பாடு மறந்து வேலை செய்துகொண்டிருந்தான்.

மனதில் கவிதாவுக்காகவும் இந்துமதிக்காகவும் வருந்திக்கொண்டிருக்க, அவனிடம் ஒரு சிறுவன் வந்தான், கையில் உணவு தட்டுடன்.

“யாருடா தந்தா?” என கேட்க, அந்த சிறுவன் கவிதாவை காட்டினான். அக்காவை நினைத்து புன்னகையுடன் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கினான்.

ஒருவழியாக பூஜைகள் சடங்குகள் முடிந்த போதுதான், கவிதாவுக்குச் செழியனிடம் பேச நேரம் கிடைத்தது.

அவனிடம், “நீ சாப்பிட்டயாடா? சுத்திட்டே இருந்தயே. நானும் சரியா கவனிக்கவே இல்ல. இரு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றதும் கொஞ்சம் குழம்பினான் செழியன்.

‘அக்காதானே உணவு கொடுத்தனுப்பினாள். எதற்கு இப்படி சொல்லவேண்டும்?’ என நினைத்து, தான் சாப்பிட்டதாக சொல்லிவிட்டு, அவசரமாக அந்த சிறுவனை தேடி கண்டுபிடித்தான்.

அவனை நிறுத்தி, “யாரு எனக்கு சாப்பாடு குடுத்தது?” என செழியன் கேட்க, அவன் கவிதாவை கை காட்டினான். செழியன் முறைத்ததும், அவன் கொஞ்சம் பயந்து, கையை ப்ரியாவிடம் நிறுத்தினான்.

நெற்றி சுருங்க அதிர்ந்த செழியன் மனதில் சொல்ல முடியாத பல உணர்வுகள். சந்தோஷத்தினால் வந்த ஒரு சின்ன படபடப்பு. ப்ரியாவை பார்த்திருந்த கண்கள், கொஞ்சம் கண்ணீரில் பளபளக்க, முகத்தில் மனநிறைவுடன் புன்னகை வந்தது.

***

5
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved